வெற்றிக்கான வழி
வெற்றிக்கான வழி
முன்பொரு காலத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் தாயப்பன் என்ற ஒரு சிறுவன் வசித்து வந்தான். தாயப்பனது பெற்றோர்கள் ஒரு ஏழை சலவைத் தொழிலாளிகள் ஆவர். தாயப்பன் மதுரையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவந்தான். ஏழைக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தன் வாழ்வில் எப்படியாவது வெற்றி அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு நன்கு படித்து வந்தான் தாயப்பன். ஒரு நாள் தாயப்பனது வகுப்பு ஆசிரியர் ஒரு பாடத்தை நடத்தும் பொழுது வாழ்வில் ஒருவர் வெற்றியடைய விடாமுயற்சியும் தெய்வ நம்பிக்கையும் அவசியம் எனக் கற்றுக்கொடுத்த தகவல்கள் அவன் மனதில் ஆழமாக பதிந்தது. அச்சமயத்தில் வகுப்பாசிரியர் ஒரு தகவலை வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தெரியப்படுத்தினார். அதாவது 1330 திருக்குறள்களையும் எவர் ஒருவர் மனப்பாடம் செய்து பொருளோடு கூறுகிறார்களோ அவர்களுக்கு கல்லூரி படிப்பு வரை உதவி செய்ய ஒரு தனியார் நிறுவனம் கூறியுள்ளது என வகுப்பு ஆசிரியர் கூறினார். தாயப்பனது ஏழ்மை நிலையை நன்கு அறிந்திருந்த வகுப்பாசிரியர் தாயப்பனிடத்தில் எப்படியாவது இந்த போட்டியில் நீ வெற்றி அடைந்து விட்டால் உனது கல்லூரி படிப்பு வரை அவர்களே உதவி செய்து விடுவார்கள் எனக் கூறி, தன்னிடம் உள்ள திருக்குறள் புத்தகத்தையும் தாயப்பன் இடத்தில் கொடுத்து இதனை என் நன்கு படித்துப் போட்டியில் வெற்றி அடைந்து விட்டு புத்தகத்தை என்னிடம் திருப்பிக் கொடுத்து விடு எனக் கூறினார். இதனை கவனித்துக் கொண்டிருந்த தாயப்பனது வகுப்பு மாணவன் அரங்கப்பன், "எப்பொழுதும் படிப்பிலும் போட்டியிலும் தாயப்பனே வெற்றியடைந்து விடுகிறான்,இந்த முறை தாயப்பனை வீழ்த்தி நாம் வெற்றியடைய வேண்டும்" என பொறாமை எண்ணத்தோடு சிந்திக்கின்றான். அன்றைய மாலைப் பொழுது விளையாட்டுப் பாட வேளையில் வகுப்பு மாணவர்கள் அனைவரும் விளையாட்டு மைதானத்திற்கு சென்றுவிட்டனர். இதுதான் சரியான சமயம் என்று நினைத்த அரங்கப்பன், எவரும் இல்லாத அந்த நேரத்தில் எவருக்கும் தெரியாமல் புத்தகப் பையில் இருந்து திருக்குறள் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டான். இனிமேல் தாயப்பன் என்ன செய்வான்? ஏனென்றால், திருக்குறள் புத்தகத்தை விலைக்கு வாங்கும் அளவிற்கு வசதி இல்லாதவனாக இருக்கும் காரணத்தினால், அவனால் திருக்குறளை படிக்கவும் முடியாது, போட்டியில் வெற்றி அடைய முடியாது, என இரங்கப்பன் நினைத்தான். திருக்குறள் புத்தகம் திருடப்பட்டதை அறியாத தாயப்பன் அன்று மாலை வீட்டுக்குச் சென்று தாய் தந்தையருக்கு சிறு உதவிகளை எல்லாம் செய்து விட்டு, திருக்குறளைப் படிப்பதற்காகப் புத்தகத்தை எடுக்க முயலும் பொழுது தான், புத்தகப் பையில் திருக்குறள் புத்தகம் இல்லை என்று தாயப்பனுக்குத் தெரிந்தது. என்ன செய்வதென்று தெரியாத தாயப்பன் தவித்தான் அழுதான், பெற்றோரிடத்தில் புலம்பினான். காணாமல் போனது அவனுடைய புத்தகம் அல்ல; தனது வகுப்பு ஆசிரியர் தனக்காக கொடுத்த புத்தகமல்லவா இது. இன்னும் பத்து நாட்களில் திருக்குறள் போட்டி உள்ள நிலையில் நான் என்ன செய்வேன் எனக் கதறினான். நாட்கள் சில கடந்தன. தாயப்பன் பள்ளிக்குச் செல்லவில்லை. போட்டிக்குரிய நாளும் வந்தது. தாயப்பன் பள்ளிக்கு வராததால் அவன் போட்டியில் கலந்து கொள்ள மாட்டான். வெற்றி நமக்கே என அரங்கப்பன் மகிழ்ச்சியில் இருந்தான். போட்டி தொடங்கும் ஒரு சில மணித்துளிகளுக்கு முன்பு அவசர அவசரமாக பள்ளிக்கு தாயப்பன் வந்து விட்டான். அவனைப் பார்த்த மாத்திரத்தில் அரங்கப்பன் அதிர்ந்து போனான். போட்டியில் கலந்து கொண்ட தாயப்பன் 1330 குறள்களையும் கூறி முதல் பரிசை வென்றதோடு, தனியார் நிறுவனம் செய்யும் உதவிக்கான சான்றிதழையும் பெற்றுக் கொண்டான். என்ன செய்வதென்று தெரியாது அரங்கப்பன் மனதிற்குள் குழம்பினான். மறுநாள் காலையில் எப்பொழுதும் போல் வகுப்பு தொடங்கிற்று. தாயப்பன் பள்ளிக்கு வந்திருந்தான். வகுப்பாசிரியர் தாயப்பனைப் பார்த்து, தாயப்பா... ஏன் 9 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. திடீரென்று போட்டியில் அவசரம் அவசரமாக கலந்து கொண்டாய். என்ன நடந்தது? என கேட்டார். அதற்கு தாயப்பன் ஐயா! என்னை மன்னித்து விடுங்கள். தாங்கள் எனக்கு கொடுத்த திருக்குறள் புத்தகம் காணாமல் போய்விட்டது என்று தாயப்பன், ஆசிரியரிடம் கூறினான். அதற்கு ஆசிரியர், அப்படியா? திருக்குறள் புத்தகம் காணாமல் போய்விட்டதா? பிறகு எவ்வாறு திருக்குறளைப் படித்தாய் என ஆசிரியர் தாயப்பனிடம் கேட்டேன். அதற்கு தாயப்பன், ஐயா நீங்கள் ஒரு முறை பாடம் நடத்தும் பொழுது வாழ்வில் வெற்றி அடைவதற்கு "விடாமுயற்சியும் தெய்வ நம்பிக்கையும் வேண்டும்" என்று கூறினீர்களே! அதை நான் மனதில் வைத்திருந்தேன். திருக்குறள் புத்தகம் தொலைந்து விட்டதே! நான் என்ன செய்யப் போகிறேன்.. எவ்வாறு நான் இப்போட்டியில் வெற்றி அடையப் போகிறேன்? என நினைத்துக் கொண்டே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றிருந்தேன். அப்பொழுது கோயில் பிரகாரத்தை சுற்றி வரும் பொழுது மிகப்பெரிய ஆச்சரியம் எனக்கு காத்திருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் உள்பிரகாரச் சுவரில் 1330 குறள்களும் சலவைக் கல்லில் பதிக்கப்பட்டு இருந்தது. அதைக் கண்டவுடன் என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. ஒவ்வொரு நாளும் காலையில் கோயில் திறந்த உடன் கோயிலுக்கு சென்று திருக்குறளை படிக்க ஆரம்பித்து இரவு கோயில் மூடும் வரை இருந்து படித்து விட்டு வருவேன். ஐயா 9 நாட்களும் அவ்வாறே படித்தேன். விடாமுயற்சியுடன் படித்த காரணத்தினால் போட்டியில் வெற்றி பெற்றேன் என தாயப்பன் கூறினார். வகுப்பாசிரியரும் வகுப்பின்மற்ற மாணவர்களும் தாயப்பன் கூறியதை கண்டு வியந்து பார்த்தனர். வகுப் பாசிரியர் தாயப்பனை கட்டித்தழுவி வாழ்த்துகளைக் கூறினார். அப்பொழுது மெதுவாக ஒரு குரல் ஐயா என்னை மன்னித்து விடுங்கள் என ஒரு திசை நோக்கி வந்தது. அக்குரல் வேறு யாருமில்லை. அரங்கப்பனே அக்குரலுக்குச் சொந்தக்காரன். தான் செய்த தவறை ஆசிரியர் இடத்திலும் தாயப்பனிடத்திலும் கூறி மன்னிப்பு கேட்டான். அப்பொழுது ஆசிரியர், அன்புச் செல்வங்களே!! உங்களுக்குள் போட்டி இருக்கலாம்; பொறாமை குணம் இருக்கக் கூடாது. என்றென்றும் நீங்கள் வாழ்வில் வெற்றி அடைய விடாமுயற்சியும் இறை நம்பிக்கையையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.. வாழ்வில் வெற்றி அடைவீர்கள்!! எனக் கூறினார்.
நன்றி!
