மதுரை முரளி

Classics Crime Inspirational

5.0  

மதுரை முரளி

Classics Crime Inspirational

அஷ்டாங்க விமானம்

அஷ்டாங்க விமானம்

7 mins
550


              “அஷ்டாங்க விமானம் “

                            – மதுரை முரளி


     உள்ளூர் பேருந்து நிலையப் பின்புறத்தில், வெள்ளை நிற எழுத்துக்களை நெற்றியில் தாங்கிய இரத்த நிறக்கட்டிடம்..

           “ Y-2 ” காவல் நிலையம் . 

    ஞாயிற்றுக்கிழமை மன நிலையில்... ஓய்வாய்.

    “ ரோகிணிம்மா., நம்ம ஆய்வாளர் ஐயா தான், நேற்றிரவு ரோந்து பணி போயிருப்பாரில்லை? வர, எப்படியும் மதியம் ஆகும் . “ எனத் தலைமைக் காவலர், சக காவலரிடம் கூற,

    “ ஆமா இலட்சுமணண்ணே. பாவம் ஐயா. இராத்தூக்கம் இல்லாம, பகல்ல ஒரு நாலு மணி நேரமாவது உறங்க வேண்டாமா?” பதில் சொன்னார் ஏட்டு ரோகிணி.

    “ நான் என்ன சொல்றேன்னா.. கொஞ்ச நேரம் ‘பாரா’வுக்கு நீங்க ஓய்வு கொடுங்க. வாசல்லயே எவ்வளவு நேரம் நிப்பீங்க? உள்ளே வந்து உக்காரும்மா “ இலட்சுமணன் பேச,

    “ அது சரி இல்லைண்ணே. உடம்புக்கு சுகம் பழகிடுச்சுன்னா, உழைப்பை மறந்திடும் “ சொன்னவள், மரக்கட்டை துப்பாக்கியை கை மாற்றிக்கொண்டாள்.

    “ இங்கே பாரு ரோகிணி, இப்ப.. இங்கே, நான் தான் நிலைய அதிகாரி. இது என்னோட உத்தரவு. பக்கத்து , தேனீர் கடைக்கு போன்

 பண்ணிட்டேன். நிமிஷத்தில, தேநீரும் பன்னும் வந்திடும் “மீண்டும் அழைக்க,

    அவரது அன்பான ஆணையை ஏற்ற ரோகிணி, உள்ளே வந்து அமர்ந்தாள்.

    பேச்சு தொடங்கியது அவர்களுக்குள். 

    “ அண்ணே.. நம்ம புது நம்ம ஆய்வாளர் ஐயா, ஒரே பக்தி மயமா இருக்காரே ?.” ரோகிணி கேள்விக்கணையைத் தொடுக்க,

    அதற்கு இலேசாய்க் குரலைத் தாழ்த்தி பேச ஆரம்பித்தவர்,

   “ நம்ம நிலைய வண்டி ஓட்டுனர் இராமு, சொன்னாப்ல... காலையில தினமும் , கூடலழகர் சன்னதியில் ஐயா சரியாக 8 மணிக்கு ஆஜர். காலை தரிசனம், தீபாராதனை எல்லாம் பார்த்துட்டு தான் இங்கே வேலைக்கு வர்றாரு. “ என முடிக்க,

   “ அதாண்ணே. அவர் மேஜை மேல, தினமும் எப்போதுமே ஒரு கிண்ணத்தில் துளசி இருக்கு. அப்பப்ப, வாயில போட்டு மென்னுக்கிட்டு இருக்காரு. “

   “ சரியா கவனிச்சிருக்கியேம்மா. நம்ம புது ஐயா, அடிக்கடி ஒரு வாசகம் சொல்லுவாரு. வாழ்க்கை ஒரு வரம். அதை நாம, நமக்கும், மத்தவங்களுக்கும் நல்லபடியா பயன்படுத்தணும்னு . பழைய ஐயா மாதிரியெல்லாம் இவர் ‘கெடுபிடி’ கடைபிடிக்கிறது கிடையாது. இத்தனைக்கும் ஒரு நாற்பத்தைஞ்சு வயசு தான் ஐயாவுக்கு . எந்த வழக்கு சிக்கினாலும், மிரட்டி, உருட்டி, எச்சரிச்சே.. உண்மைய வர வைச்சிடுறாரு. “ பேசியவர், ‘டக்’ கெனக் கையை உயர்த்திக் காட்டி,

  “ தேநீர் பையன் வர்றான்.” என இடைவெளி விட்டார். 

   அடுத்து, தேநீரும், பன்னும் தங்களின் கச்சேரியைத் தொடங்கின வாயில்.

   “ரோகிணிம்மா. நான் சொல்றது சரி தானே? . பத்து நாளைக்கு முன்னாடி, செயின் பறிப்பு வழக்கில் ஒரு வாலிபனைக் கொண்டு வந்தாங்க பறக்கும் அணி. இதேயிது, பழைய ஆய்வாளராக இருந்தா, அந்த பையனுக்கு ‘மாவுக்கட்டு’ தான். அப்புறம், பாத்ரூம் வழுக்கல் தீர்ப்புதான் !” பலமாய்ச் சிரிக்க,

   ரோகிணியும் இணைந்துகொண்டாள் சிரிப்பில்.

   “ ஆமா. ஆனா, அன்னிக்குப் பாருங்க. பிரம்பை கையில் எடுத்து ஆக்ரோசமா சுழற்றினாரு ஐயா. அடியைத் தரையில்தான் அடிச்சாரு .”   

   “ சரிதான். உண்மைதான். உடனே, அந்தப்பையன் ‘மளமள’ன்னு , கூட்டாளிகள் பெயரை உளறிட்டான் . அதோட, அவனுக்கு அது முதல் முயற்சி போல. எதுவுமே முதன்முதலாய் நடக்கும்போது, அது... “ நக்கலாய்ச் சிரிக்க, 

   ” அண்ணே..” ரோகிணி இலேசாய்த் தலையைச் சாய்த்துப் பார்க்க,

   “ அட! பொதுவா சொன்னேம்மா. முதன்முதலா, வண்டி ஓட்டினா, நடுக்கம் யாருக்கும் வருமே! “ குறும்பாய்ச் சிரித்துச் சமாளித்தார்.

   “ வண்டி ஓட்டறவங்களுக்கு மட்டுமில்ல, பாதையில நடக்கிற வங்களுக்கும்தான்.. நடுக்கம், கூடவே பயமும் “ இம்முறை ரோகிணி பலமாய்ச் சிரிக்க,

   அரட்டை கச்சேரி களைக்கட்டியது.

   “ உடனே, நம்ம ஐயா அந்தப் பையனைப் பற்றிய தகவலைத் திரட்டிட்டாரு.

பாவம், அந்த பையன் ஒரு கல்லூரி மாணவன் . குடும்பச் சூழல் காரணமாக கல்லூரிக் கட்டணம் கட்டக்கூட வசதியில்லாம, வழிப்பறிக்கும்பல் கூட அப்பத்தான் சேர்ந்திருக்கான். “ சற்று இடைவெளிவிட்டு இளைப்பாறிய இலட்சுமணன் ,

   “ அப்புறம் , அந்த பையனுக்கு அறிவுரை கூறி, கூடவே என்னையத்தான், அந்தக் கல்லூரிக்கு போய் விவரத்தைக் கேட்டு, பணம் கட்டச் சொன்னாரு. “

  “ ரொம்ப பெரிய மனசுண்ணே... ஐயாவுக்கு. “ ரோகிணி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, 

   தலைமை காவலர் இலட்சுமணன் அலைபேசியில் ‘மிஸ்டு’ கால் வர,

   “ அ...அது , ஐயா, அவரது வீட்டில இருந்து கிளம்பிட்டாரு. நம்ம நிலைய வண்டி ஓட்டுனர் இராமு ‘சிக்னல்’ கொடுக்கிறாரு” என உஷாராக, பரபரப்பாய்ப் ‘பாரா’ பார்க்க எழுந்து ஓடினார் ரோகிணி.

   சில நிமிட இடைவெளியில், “ Y- 2 “ காவல் நிலையம் முழு உயிர்பெற்று பரபரப்பானது. பொலிரோ சற்று பலமாக ‘ஹாரன்’ சப்தத்துடன், முன்னெச்சரிக்கை விடுத்து உள்ளே நுழைய ,

   பெரிய ‘சல்யூட்’ மரியாதைகள் ஆய்வாளர் மதுசூதனுக்கு.

   தலையை மேலும் , கீழும் அசைத்தவர், ஓரமாய் நின்று வணங்கிய ‘கருப்பு கோட்டு’ க்காரரைக் கண்டும், காணாது கடந்து சென்றவர்,

  அறையை அடைந்து, தன் இருக்கையை நிரப்பினார்.

  அடுத்து ஒலித்த’ அழைப்பானில், அலுவலக கோப்புகளும் , கடிதங்களும் கையெழுத்து பெற, கால் முளைத்து அணிவகுத்தன எழுத்தர் மூலம்.

  “ என்ன முத்து வேறு பிரச்சினை ஏதாவது ? “ 

   “ நாளைக்குத் தான் நீதிமன்ற அழைப்பிருக்கு. நேர்ல போகணும்.“

  “ சரி, சரி பார்த்துக்கலாம் . இரவு ரோந்துப்படைக் கிட்டயிருந்து, தகவல் ஏதும் உண்டா? “ இருக்கையில் சரிந்து அமர்ந்தவர், 

   மீசையை முறுக்கியபடி தன் வலது கண்ணை சுருக்கிக்கேட்க,

   “ இதுவரை சம்பவம் ஒண்ணுமில்லை ஐயா. “ 

   “ சரி, நீங்க போகலாம். அடுத்த அரைமணிக்கு , யாரையும் உள்ளே அனுப்பாதே “ 

   மீண்டும் ‘சல்யூட்’ அடித்து, ஓரடி பின்னோக்கி நகர்ந்தவர்,

  “ அ.. அப்புறம் நம்ம வழக்கறிஞர் சரவணன் ஐயா.. “

‘சட்’டென எரிச்சலான ஆய்வாளர் மதுசூதன்,

  “ என்ன, நம்ம வழக்கறிஞரா? இனிமே, இப்படி பேசாத. போய்ச் சொல்லு.. ஐயா முக்கியமான ஆவணங்களை படிக்கிறாரு. அரை மணி கழிச்சு கூப்பிடுவார்னு “ சற்று சத்தமாய் வாசலில் நின்ற கருப்பு கோட்டுக்கு கேட்கும் விதமாய் கூறினார்.

  “ என்ன எழுத்தரே, இன்னிக்கும், நம்ம ஐயா., ‘வணக்கம் அண்ணே’ க்கு அதான் க.கோ.வுக்கு உடனே அனுமதி தரல்லை? “ இலட்சுமணன் ரகசியமாய் வினவ, 

  “ புது ஐயா வந்ததிலிருந்து , அவரைச் சந்திப்பதைத் தவிர்க்கிறாரு “ 

   மீண்டும் அருகில் வந்த க.கோ, எழுத்தரிடம் அனுமதி கேட்க,  

   “ ம், கூப்பிடுவாரு . அப்பச் சொல்றேன் “ எழுத்தரும் தவிர்த்தார்.

   மேலும் முப்பது நிமிடங்கள் நகர்ந்ததும் அழைப்பு வரவே, உள்ளே நுழைந்தார் க.கோ.

   “ அண்ணே., வணக்கம் அண்ணே. “ உற்சாகமாய்க் கும்பிட்டவரை,

  “ ஹ.. ஹ. உட்காருங்க . அஞ்சு நிமிஷம் தான். ம்., மேலே பேசுங்க” கையை ஆட்டித் தொடங்கச் சொல்ல ,

   “ கொரோனா பாதிப்பு இன்னும் விடலை...அதுவும் எனக்கு. வழக்கே இல்லாம ரொம்ப வறட்சியாயிருக்கு “ மெல்ல இழுத்தார் க.கோ.

  “ அதுக்கு?, தினந்தினம் குற்றம் பெருகுணும்னு உங்களுக்கு ஆசை, நினைப்பா? “ குத்தலாய் ஆய்வாளர் கோபப்பட,

  “ ஐயா அப்படியில்லை. முன்னாடியெல்லாம் ‘முதல் பதிவு அறிக்கை’ தயார் பண்றதுக்கு முன்னாடியே, எனக்குத் தகவல் வரும் . அப்ப, நான் வந்து ‘சரி’க்கட்டுவேன். இப்ப..அப்படியில்லை . கூடவே, வழக்குகள் பதிவு குறையறதா எனக்குள்ள புரிதல் “ வழிந்த க. கோ. வை,

  “ அட, நிறுத்துங்க. மூணு மாதம் முன்னாடி, ஒரு தினசரியில, நம்ம காவல்நிலையத்தைப் பத்தி ‘பெட்டி’ச் செய்தி போட்டதை பார்க்கல நீங்க? அதுவும், குறிப்பா உங்களைக் குறிச்சு. உங்க மூலமா, நிறைய, மறைமுக வேலைகள் நடக்குதுன்னு போட்டிருந்தாங்க. ஞாபகம் இருக்குல்ல? நானும், இந்த நிலையத்தை வந்ததில் இருந்து, கொஞ்சம் கொஞ்சம்மா மாத்திகிட்டு வரேன். வழக்கைக் குற்றமாக மட்டுமே பார்க்காம, நான் சில வாய்ப்புகளையும் கொடுத்து, சமூகத்தில குற்றத்தைக் குறைக்க முடிவு பண்ணியிருக்கேன். அப்புறம் ? “ 

  ‘ நகருங்க’ என்பதை நாசுக்காக ஆய்வாளர் சொல்லி முடிக்க,

  “ அண்ணே., உங்களை நம்பித்தான் எங்க பொழப்பு . உங்களுக்கு புரியாதது, தெரியாதது ஏதும் இல்லை “ இலேசாய்க் க.கோ. தலையைச் சொரிய,   

  “ இனிமே, இங்கே இப்படித்தான். எனக்கு, நாளைக்கு நீதிமன்ற அழைப்பிருக்கு. ம்., பார்க்கலாம் “ என அவர் ‘அழைப்பு மணி’யை அழுத்துமுன்,

  “ அண்ணே.. ஏதாவது என் தரப்பில் குறையிருந்தா?..” மெல்லக் குனித்து, கிசுகிசுத்த க.கோ.வைப் பார்த்து,

  ஆழமாய் நிமிர்ந்துப் பார்த்தவர், ‘அழைப்பு மணி’யை சற்று பலமாக அடிக்க,

   தலையைத் தொங்கப் போட்டு, அறையை விட்டு வெளியேறினார் க.கோ.

   அடுத்த நாள் காலை ஏழு மணி ..

   மதுரை ‘பெரியார்’ பேருந்து நிலையத்தின் பாதி உயிர் பெற்ற காம்ப்லெக்ஸ் பகுதி, அதனை அடுத்துள்ள ஹோட்டல் ஆர்த்தி பகுதிகள் பரபரப்பின்றிக் காட்சியளித்தது. 

 பைக்கில் இருந்து இறங்கிய ஆய்வாளர் மதுசூதன்,

  கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் கூடலழகர் இராஜகோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்தவர்,

  பெருமாள் சன்னதிக்கு இடப்பக்கம் திரும்பி, மீண்டும் வலப்பக்கம் திரும்ப.. ‘கல்யானை’ அச்சு, அசலாய்.

  யாருக்குமே முதல் பார்வையில் அது நிஜ யானையாய்க் காட்சி தந்தது.

  மனம் எதிலும் லயிக்காமல் போக, யோசனையுடன் நேராய் அஷ்டாங்க விமானம் சுற்றுக்குத் திரும்பி நடக்கத் தொடங்கியவர், முக்கால் சுற்று முடிந்து, ஆண்டாள் சன்னதியில் நுழைந்தார் மதுசூதன்.

  அங்கே மூலவர் சன்னதியில் வழக்கமாயிருக்கும் அர்ச்சகர் நாராயணன்.. இன்று, இங்கே.

  ஆண்டாளோடு, அவரையும் ஆய்வாளர் வணங்க ,

  இவரை அருகில் அழைத்தவர்,

 “ நீங்க இப்பல்லாம் காலையில , சுருக்க கோவிலுக்கு வர்றேளே?” கேள்விக் கணையைத் தொடுக்கத் தொடங்கினார் அர்ச்சகர்.

  “ ஆமா இந்த நேரம் தான் பெருமாளைத் தரிசிக்க உகந்த நேரம். அமைதியா தரிசிக்கும் நேரம் “ சொன்னவாறே சன்னதியின் மண்டபத்தில் அமர்ந்தவர்,   

  “ எனக்குச் சில தகவல்கள் தெரிஞ்சுக்க ஆசை . இந்த கோயில் விமான விசேஷம் பற்றிச் சொல்லுங்க. ” தகவல் கேட்க மதுசூதன் தயாராக,

  ஆச்சரியமாய் ஆய்வாளரைப் பார்வையில் அளந்த அர்ச்சகர்,

  “ நிச்சயமா. முதல் விஷயம்..இது ரொம்ப விசேஷமான விமானம். அஷ்டாங்க விமானம்னு சொல்லுவா. அதாவது , மூன்று தளங்கள், ஐந்து நிலைகள், எட்டு பகுதிகளாக உயர்ந்து நிற்கும் இந்த விமானம் ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற எட்டெழுத்து மந்திரத்தின் வடிவம். பஞ்ச பூதங்களைக் குறிக்கிறமாதிரி ஐந்து கலசங்கள். இந்த கோவில் தவிர திருகோஷ்டியூர் கோவில்ல மட்டுமே இவ்விமானம் இருக்கு . “

  “ அப்படியா! என்ன விசேஷம்? “ ஆர்வம் மேலிட மதுசூதனன் கேட்க,

  “ ம்., சொல்றேன். அதாவது கீழ்தளத்தில, கூடலழகர் அமர்ந்த கோலம். இரண்டாவது தளத்தில, சூர்யநாராயணர் நின்ற கோலம். மூன்றாவது தளத்தில பாற்கடல் நாதர் பள்ளி கொண்ட கோலம். இப்படி நின்ற, அமர்ந்த , சையனக்கோலத்தில் பெருமாள் காட்சி தருவது ரொம்பச் சிறப்பு. விமான நிழல் தரையில் விழாது. உற்சவர் ‘வியூக சுந்தரராஜன்’ “

  “ அவரோட பெயர் காரணம் என்னங்கய்யா?”

  “ எந்த காரியம் ஜெயமாகும்னாலும், அதற்கு இறைவனோட ஆசி முக்கியம். தகுந்த வியூகம் அதாவது திட்டம் முக்கியம். நாம் அந்த காரியத்தை தொடங்கும் போது, பெருமானை வணங்கித் தொடங்கினா, நமக்கு நல்ல திட்டத்தையும், அதைக்கொண்டு செலுத்திட , மன வலிமையையும் நமக்கு அவர் தருவார்.இப்பகுதிய ஆண்ட மன்னர்கள் ,போர் புரியப்போகும் முன்னாடி, பெருமாளைத் தான் வேண்டி, வியுகம் அமைத்ததா வரலாறு. “

  “ மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியாயிருக்கு. நானும் ஒரு யோசனையோட தான் பெருமாளை வழிபட வந்தேன். எனக்காக நீங்களும் 

வேண்டிக்கோங்க.” என ஆய்வாளர் கையெடுத்துக் கும்பிட,

  “ ஷேமமா இருங்கோ. நல்லதை நினைச்சு, நல்லதை தொடங்கினா..நல்லதே நடக்கும். நிச்சயம் அது நமக்கு, நல்ல பலனையே தரும். “ சொன்னவர் , தாழம்பூ குங்குமப் பிரசாதம் தர,

  வாங்கி நெற்றியில் இட்டு, நிமிர்ந்து நடந்து, கோயில் வாசலை விட்டு வெளி வந்தார் மதுசூதன்.

  வண்டியைக் கிளப்பி கியரை மாற்றியவர், சற்று நிறுத்தி,

  ‘பச்சை வலை’ போர்த்தி அடுத்து வரப்போகும் கும்பாபிஷேகத்திற்காக காத்திருக்கும் கோபுரத்தை மீண்டும் ஒருமுறை வணங்கி, வண்டியைக் கிளம்பினார் மதுசூதன்.

  நிலைய வாசலில் நுழைந்தவரை அழைத்தது அலைபேசி .

  தொடு திரையில் மேலதிகாரியின் அழைப்பு எண். தொட்டு தொடங்கினார் மதுசூதன்.

  “ வணக்கம் ஐயா. இன்னிக்கு நீதிமன்ற நேரடி அழைப்பு. அதான் விரைவா கிளம்ப, நேரமா நிலையம் வந்திட்டேன் . “

  “ஹ..ஹ., வணக்கம். உங்களுக்கு எத்தனை தடவை ஒரு விஷயத்தை செய்ய சொல்ல? இப்ப, நான் பேசுறதை மட்டும் கேளுங்க. பதில் வேணாம், என்ன? “ மறுமுனை மிரட்ட, விரட்ட,

 “ ம்., “ கொட்டினார் ஆய்வாளர்.

 “ எனக்கு, இன்னிக்கு ,நான் சொன்ன விஷயம் நடந்தாகணும். என் பையன் ரமேஷ் . அவன் கல்லூரி மாணவர் தேர்தல்ல, தலைவர் பதவிக்கு நிற்கிறான். அவனை எதிர்த்து, ஒரு பய வீம்புக்கு நிற்கிறான். அதனால, நான் சொன்னபடி , அந்த பொடிப்பய மேல ‘ஈவ்டீசிங்’ கேஸ் போடறீங்க. அவனைத் தேர்தலில் நிற்க விடாம செய்யணும். குறைஞ்சது மூணு பிரிவுகள்ல. அதுவும், இன்னிக்கு மாலைக்குள்ள. “ மீண்டும் எதிர்முனை கடுமையாய்க் குரலை உயர்த்த,

  “ ஐயா.. ஒரு நிமிஷம். தேர்தல்ங்கிறது ஒரு ஆரோக்கியமான போட்டியா இருக்கணும்... அது எங்கே நடந்தாலும். நியாய, தர்மம் இல்லாம கிடைக்கிற, வாங்குற வெற்றி.. வெற்றியல்ல. அதுவும், “

  “ என்னய்யா அதுவும்? “ இடைவெட்டி அதிகாரி குரல் கேட்க,

  “ மன்னிக்கணும் . இல்லாத ஒரு விஷயத்தை தப்பா உருவாக்கி, ஒரு மாணவனின் எதிர்காலத்தை எப்படி கேள்விக்குறியாக்குறது? அது பெரிய பாதிப்பா மாறும் . புரிஞ்சுக்கங்க ஐயா. “

  “ நிறுத்து...உன் உபதேசத்தை . என்னய்யா பெரிய பாதிப்பு? நான் உன்னோட மேலதிகாரி . உன்னோட நலன், எதிர்கால வாழ்க்கை எல்லாம் நான் எழுதற, வருடாந்திர இரகசியக்குறிப்பில. மனசில வை. எனக்குத் தலைமைச் செயலக அதிகாரிகளோட ஒரு இணைய வழி கூட்டம் இருக்கு மாலை வரைக்கும். நடுவில தொந்தரவு பண்ணாத . இன்னிக்கு மாலையே, நான் சொன்ன மாதிரி ஒரு வழக்கு பதிவு பண்ணி என்கிட்ட நேரில் காண்பி.”

 “ ஐயா, ஒரு நிமிஷம் . நா..”

 “ பேசாதே. செயலில் இறங்கு. நான் சொன்னபடி மாலை சந்திப்போம் “ இணைப்பு துண்டிக்கப்பட,

  உள்ளுக்குள் எரிச்சலாய் தன் இருக்கையில் அமர்ந்து, தன் அடுத்தகட்ட செயலை ஆலோசிக்க ஆரம்பித்தார் ஆய்வாளர் மதுசூதன்.

  அடுத்த அரை மணி நேர ஆலோசனைக்குப் பின், தனது ரோந்து படையை அழைத்து ‘படபட’ வெனக் கட்டளைகளைப் பிறப்பித்தவர், 

  கிண்ணத்தில் இருந்த துளசியை எடுத்து வாயில் போட்டு,

  நேரடியாக களத்தில் இறங்கி, ‘விறுவிறு’ப்பாய் வேலையை முடித்தார் ஆய்வாளர் மதுசூதன்.

  மீண்டும் மாலை நேர சந்திப்புக்கு மேலதிகாரி அறை வாசலில் காத்திருக்க,

  இணையவழி கூட்டம் முடிந்து, அதிகாரி வேகமாய் தன் அறைக்குள் நுழைந்ததுமே, முதல் அழைப்புமணி ஆய்வாளருக்கு தான்.

 “ வணக்கம் ஐயா. “ விறைப்பாக ‘சல்யூட்’ மரியாதை பதிவு செய்தவர்,

  “ நீங்க சொன்னபடி வழக்கும் பதிவு பண்ணிவிட்டேன். நான் விவரமா சொல்லலாமா? “ எனத் தயங்க,

 “ அதிகமா பேசாம, சுருக்கமா சொல்லு . பேப்பர் கொண்டு வரலை? “ முறைப்பாய் அவர்.

  “ எல்லாத்தையும் போட்டோவா பிடிச்சிருக்கேன். நம்ம ரோந்து படை மூலம் தெளிவான ஆதாரம் சிக்கியது. கூடவே, வாக்குமூலம் எழுதி சாட்சி கையெழுத்தும் வாங்கிட்டேன். இனி, நீதிபதி முன்னாடி நிறுத்தணும் “ நிறுத்தினார் மதுசூதன்.

  “ ம்., நிறுத்திட வேண்டியது தானே? “ ஆய்வாளரை, அதிகாரி மேலிறங்க பார்க்க ,

  “ இருந்தாலும், உங்க அனுமதி இல்லாம எப்படி? இப்ப நீங்களே சொல்லிட்டீங்க. சம்மதிச்சிட்டீங்க. எதுக்கும் , விவரங்களை வாட்ஸ் -அப்ல அனுப்புறேன். இப்ப..” என வினாடியில் தகவல்களைப் பகிர்ந்தார் மதுசூதன்.

  “ டிங்..டிங்.” பரிமாற்று தகவல்கள் போட்டோவாய் அதிகாரியின் பார்வையில்.

  ‘சடா’ ரென தன் இருக்கையை உதைத்து எழுந்தவர் ,

  “ யோவ், என்ன காரியம் பண்ணிருக்கே ? என் மவனைப் போய் கைது பண்ணி..” ஓங்கி தன் டேபிளைக் குத்தியவர்,

  “ உ.. உன்னை. முதல் தகவல் அறிக்கை எங்கே? எப்படி? “ உணர்ச்சிப் பிழம்பாய் அவர் கத்த,

  “ உண்மையை சொல்றேன்.. ஒரு நிமிஷம் கேளுங்க. நீங்க சொன்ன பையனை விசாரிக்கப் போய், கல்லூரியில, ஒரு பெரிய போதை பொருள் கடத்தல் பற்றிய பரிமாற்று தகவல் கிடைச்சது. அதைத் தொடர்ந்து நானே போனேன். நமது ரோந்துப்படையை, புதுசா வாங்கற கஸ்டமர் மாதிரி தயார் பண்ணி, மொத்த நெட்வொர்க்கையும் வலை வீசி பிடிச்சிட்டேன். ஆனா,அதோட தலைவன்.. உங்க பையன் ராஜேஷ். மன்னிச்சுக்குங்க ஐயா ” 

   மீண்டும் ‘சல்யூட்’ அடித்து, ஆய்வாளர் மதுசூதன் திரும்பி நடக்கத் தொடங்க,

  “ யோவ்., வேணாம்யா. என் கூட விளையாடாத. உன்னை விடமாட்டேன். “ வேகமாய் ஓடிவந்து ஆய்வாளரை அதிகாரி தடுக்க,

  “ நான், உங்க மூலமா ஒரு விஷயம் இந்த சமுதாயத்திற்குப் பதிவு பண்றேன். இப்ப எல்லார் வீட்லயும் வாரிசு ஒண்ணோ, இரண்டோ தான். அதனால, குழந்தைகளை கஷ்டம் தெரியாம வளர்க்கிறோம். அதில, தவறு எதுவும் இல்லை. ஆனா , அவங்க தவறுகளைக் கவனிக்கத் தவறிடுறோம்.அது மிகப் பெரிய தவறு. எதையுமே இல்லைன்னு சொல்லாம, கேட்டதும்..ஏன்? சில சமயம் கேட்கிறதுக்கு முன்னாடியும் வாங்கிக் கொடுக்கிறோம். விளைவு, அவங்களால, தோல்வியை, ஏமாற்றத்தை தாங்கிக்க முடியலை. ஏன்? நினைச்சுக்கூடப் பார்க்கமுடியலை. “ ஆய்வாளர் சற்று இடைவெளிவிட,

   நிலைமையின் ஆபத்தை உணர்ந்த அதிகாரி,

  “ ஒத்துக்கிறேன். இப்ப என் பையனை விடு..முதல்ல .” என அதிகாரி சற்று முரண்டு பிடிக்க,

   “ நான் சொன்ன அந்த நிலைமை தான், உங்க பையனோடது... உங்களோடது. முக்கியமா , பெத்தவங்க பசங்களை முழுமையாக நம்பி ஏமாற வேண்டிய சூழ்நிலை... இப்ப. காரணம்... ஒளிவு மறைவு இல்லாத ஊடகம் ஒரு காரணம். இனியாவது, இதை உணர்வோம். பசங்களுக்கு எது சரி, எது தவறுன்னு உணர்த்துவோம். “ ‘விருட்’ டென வெளியே வந்தவர்,

  பெரிய வேலைப்பளுவிலிருந்து மனதை விடுவிக்க, பையிலிருந்த கூடலழகர் துளசியை வாயில் போட்டு, வண்டியைக் கிளப்பியவர் பார்வையில், கூடலழகர் கோபுரம் பச்சை வலை மறைவில் பளிச்சென தெரிந்தது.

  மானசீகமாய்க் கும்பிடுப் போட்டு, நிமிர்ந்து வண்டியைக் கோவிலுக்குச் செலுத்தினார் ஆய்வாளர் மதுசூதன்.

                           ௦-௦-௦



Rate this content
Log in

Similar tamil story from Classics