மதுரை முரளி

Classics Inspirational Others

5.0  

மதுரை முரளி

Classics Inspirational Others

அம்மா

அம்மா

4 mins
631


அம்மா


                            -- மதுரை முரளி


வீட்டு ஹாலில் இருந்த கடிகாரம் எட்டு முறை குரல் எழுப்பி இரவு எட்டு என்பதை நாசுக்காய் அறிவிக்க....

ராகவனுக்கு வயிற்றில் அலாரம்.   

“ராதா...” குரலில் கோபம் மற்றும் பசி கலந்து வந்தது.

“என்னங்க?....” கையில் புத்தகம் சகிதம் பெட்ரூமிலிருந்து ஹாலுக்கு நுழைந்தாள்.

“மனுஷனுக்கு பசி உயிர் போகுது. இந்த மாதவன் வெளியே போய் ஒரு மணி நேரம் ஆயிடிச்சி...இன்னும் வரலை”

“என்னங்க... பையன் மாதவனும் மருமக லட்சுமியும் வர்ற நேரந்தான். சின்னஞ்சிறுசுங்க...கல்யாணம் ஆகி ஒரு மாசம் தானே ஆகுது...”

“எங்கே போறேன்னு சொல்லிட்டு போறது கிடையாது...  வேலையிலிருந்து வீட்டுக்கு வந்ததும் கிளம்பிட்டான்...” பையன் மீது ஆதங்கப்பட,

“அடடா... இன்னிக்கு தான் அவன் அதிசயமா ஆறு மணிக்கு வந்தான். பாவம்... லட்சுமி ஏதாவது ஆசையா கேட்டிருப்பா.. வாங்கி கொடுக்க போயிருப்பான். உங்களுக்கு பசின்னா... சாப்பாடு போடறேன்...” கையிலிருந்த புத்தகத்தை பார்த்தபடி பேசினாள் ராதா.

“ஆமா.. பையனை விட்டு கொடுக்காதே. பின்னாடி...நீதான் கஷ்டபடுவே...”

“ஹ... என்ன சொன்னீங்க?... சாப்பிடறீங்களா?...” ராதாவின் பதிலில் கோபமடைந்த ராகவன் 

வேகமாய் எழுந்து... அவளின் கையிலிருந்து புத்தகத்தை பிடுங்கினார்.

“இனிமே ஒரு புக் கிடையாது. மனுஷன் பேசும்போது அப்படி என்ன வெட்டிக்கதை படிக்கிற?...” பிடுங்கின புத்தகத்தை சோபாவில் வீச... 

ராதாவின் முகம் மாறியது. “இங்கே பாருங்க... நீங்க கிரிக்கெட் மாட்ச் பாக்கும் போது டி.வி.யை ஆஃப் பண்ணினா எப்படி இருக்கும்? அது போல தான் இதுவும். நம்ம ஒரே பையனுக்கு கல்யாணம் ஆகி புது மருமக வந்திருக்கா.... டீசண்டா நடக்க...” ராதா முடிக்குமுன், 

வீட்டு காலிங்பெல் ஒலிக்க...

ஜாடையாய் ராகவனை அமைதியாய் இருக்க சொல்லிவிட்டு... கதவை திறந்தாள்.

“அ...அப்பா...ஸாரி... போன இடத்தில் கொஞ்சம் லேட்... சின்ன டிராஃபிக் ஜாம்...” அப்பாவிடம் சமாதானம் பேசிய மாதவன்,

“ல...லட்சுமி...சீக்கிரம் டைனிங் டேபிளுக்கு சாப்பாட்டை கொண்டு வா. அப்பா பசி தாங்க மாட்டாரு...” சொன்னவன் வேகமாய் லட்சுமிக்கு உதவியாய்...

எல்லா அயிட்டங்களையும் அடுக்கினான்.

மாதவன் வேலை செய்வதை பார்த்த ராகவனுக்கு எரிச்சல் வந்து... ராதாவை ஜாடையாய் பார்க்க.... ராதா சிரித்துக் கொண்டாள்.

ராகவன் ரொம்ப ஸ்ட்ரிக்ட். எதுவுமே கரெக்டா இருக்கணும்.

பசி...ருசி அறியாது. ஆனா அது ராகவன் விஷயத்தில் கிடையாது.

“என்ன கூட்டு இது?.. கொஞ்சங்கூட டேஸ்ட் இல்லை...” ராகவன் ஆரம்பிக்க,

பதற்றமும் பயமுமாய் தெரிந்த மருமகள் லட்சுமியின் முகத்தை பார்த்துவிட்ட ராதா...

”என்னங்க... உப்பு கம்மியா இருக்கா?....” டேபிளின் அருகில் வந்தாள்.

“மனுஷன் சாப்பிடுவானா....இதை? உப்பே இல்லை....” வேகமாய் ராகவன் தட்டை தூக்க....

“இ...இருங்க... நா...நான்தான் அவசரத்துல உப்பு குறைவா போட்டுட்டேன்...” கணவனின்... கையை தடுத்தாள்.

”கதை புஸ்தகத்தை படிச்சு, படிச்சு.... நாசமாப் போன நீ.... இங்கே ஒரு மனுஷன் நாக்கு ருசியா சாப்பிட முடியலை...” ராகவனின் பேச்சில் சூடேற...

“சரி...சரி...விடுங்க. அதான்...அப்பளம் இருக்கு இல்ல... சாப்பிடுங்க. லட்சுமி கூட்டை உள்ளே கொண்டு போம்மா...” கணவ்னை சமாதானப்படுத்தினாள்.

குழம்பு சோறு முடிந்து... ரசம் சோறு வரும் தருவாயில் ராகவனுக்கு மீண்டும் அதே கூட்டை தட்டில் விட,

“ஏ...ஏய்.. அதான் வேணாம்னு சொல்லிட்டேன்னில்ல... திரும்ப...” அடுத்த மோதலுக்கு தயாரான ராகவனை,

“முதல்ல... டேஸ்ட் பாருங்க... உங்க மருமக.... சரி பண்ணிட்டா...” யோசனையாய் வாயில் போட்டவர்....

”ஹ..இப்ப ஓ.கே. பாரு... எதையும் ரசிச்சு செய்யணும். புதுசா வந்த லட்சுமி நிமிஷத்தில சரி பண்ணிட்டா... வெரிகுட்...” பாராட்டிவிட்டு சாப்பிட்டு எழுந்தார்.

மருமகள் லட்சுமி நடந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து  மீளாது இருக்க...

மெதுவாய் மருமகளை அடுப்படிக்கு அழைத்த ராதா “இங்கே பாரு லட்சுமி... பயந்துட்டியா?... அப்பாவுக்கு பசி தாங்காது. அதான் கோபப்பட்டாரு...வேற ஒண்ணும் இல்ல. சமையல் செஞ்சா மட்டும் போதாது லட்சுமி...கூடவே டேஸ்ட் பார்க்கணும்...அதுவும் பரிமாறதுக்கு முன்னாடி...” பாசமாய் மருமகளை தட்டிக் கொடுக்க.

“அம்மா... என்னை மன்னிச்சுடுங்க... லட்சுமி அழுது விட்டாள்.

“அம்மா... நான் செய்த தப்பை... சமையலை நீங்க செஞ்சதா சொல்லி... எதுக்கு நீங்க கெட்ட பேரு வாங்கினீங்க?... அதே சமயம், ரகசியமா உள்ளே வந்து உப்பை அளவா போட்டு என்னை பரிமாற செய்து... நல்ல பெயர் எனக்கு. ஏன்ம்மா?...” மாமியாரின் கை பிடித்து அழ,

“லட்சுமி... நானும் உன்னைய மாதிரி மருமகளா இருந்து வந்தவ தான்... அதுவும், பெரிய கூட்டுக்குடும்பம். அந்த அனுபவம்… சமாளிக்கிற அறிவை கொடுத்திருக்கு. நீயும் தெரிஞ்சுக்க. வருத்தப்படாதே... இனிமே கவனமா இரு...”

“எனக்கு பெத்த அம்மா மாதிரி... இனிமே நீங்க...” உணர்ச்சி வயப்பட்டவள்,

“என்னங்க...கடையில புடவையும் ஜாக்கெட்டும் வாங்கினோமே... அதை கொண்டாங்க...” மாதவனை அழைக்க...

அவன் குழப்பமாய் கவரோடு வந்தான்.

“கவரைப் பிரிங்க... அந்த புடவை ஜாக்கெட்டை அம்மாக்கிட்ட கொடுங்க...” லட்சுமி உத்தரவிட,

“ல...லட்சுமி... இது உங்க அம்மாவுக்கு நீ ஆசையாசையாய் செலக்ட் பண்ணி வாங்கினதே. இதைபோய் எங்கம்மாக்கு ஏன்?...” மாதவனுக்கு தலை சுற்றியது.

“இங்கே பாருங்க... உங்களுக்கு விஷயம் அப்புறமா சொல்றேன்... இனிமே உங்க அம்மா அப்பா... எனக்கும் அம்மா... அப்பாதான்....”

சொன்ன லட்சுமி... வேகமாய் ராதாவை கைபிடித்து கூட்டி வந்து... மாமா ராகவன் அருகில் நிற்கவைத்து...

கூடவே காலில் விழ,

ராதா பாசமாய் மருமகள் லட்சுமியை கட்டிக்கொண்டாள் அழுத்தமாய்.

            -------------------

 



Rate this content
Log in

Similar tamil story from Classics