தாய்.... நீ தானடி !
தாய்.... நீ தானடி !
அன்னையே….
என் தாய் முந்நூறு நாள் எனைச் சுமந்து…
உன் மடியில் கிடத்தினாள்!
மழலையாய் பிறந்து….
மனிதனாய் வளர்ந்து…. மண்ணில் மடியும் வரை!
பசித்த போதெல்லாம் புசிப்பதற்கு உணவளித்தாய்!
களைத்த போதெல்லாம் பருக…. இளைப்பாற நீர் தந்தாய்!
சுவாசிக்க நல்ல காற்றைத் தந்தாய்!
வசிக்க நல் இடம் கொடுத்தாய்!
நோயுற்ற போது ஔடதங்களை நல்கினாய்!
நான் களைத்து வந்து இளைப்பாறுவதும்….
கவலையுற்று தலை சாய்ப்பதும்…
மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்து குதிப்பதும்….
தடுக்கி வீழ்வதும்…. துன்புற்று அழுவதும்
உன் மடியிலே தான்!
உன்னை மிதித்தேன்…. உதைத்தேன்…. வருந்தியதில்லை!
இடித்தேன்….. தோண்
டினேன்….. சினம் கொண்டதில்லை!
உன் வனப்பையெல்லாம் அழித்து வனாந்தரமாய் ஆக்கினேன்!
உன் வளங்களைச் சுரண்டி நலங்களையெல்லாம் அழித்தேன்!
ஆயினும் என்னை உன் பொறுமையால் சகிக்கிறாய்!
ஒரு போதும் எனக்கு நிந்தனை நினைத்ததில்லை….!
கடுஞ்சொல்லால் சாடியதில்லை…!
நீ செய்த உதவியை என்றும் சொல்லிக் காட்டியதில்லை!
நான் மலர்ந்த போது…… உன் மடியில் இடம் தந்தாய்!
நான் மடிந்த போது உன் இதயத்தில் இடம் கொடுத்தாய்!
அன்னையே…. உன் கரத்தால் எனைத் தாங்கி….
உன் மடியில் எனை வாங்கி…..
என் தேவைகளையெல்லாம் நிறைவேற்றி….
நித்தம்….. நித்தம்….. எனைக் காப்பாற்றி…
காத்து நிற்கும் பூமியே …. என் தாய் நீ தானடி!