Exclusive FREE session on RIG VEDA for you, Register now!
Exclusive FREE session on RIG VEDA for you, Register now!

Arivazhagan Subbarayan

Drama Romance Thriller


5  

Arivazhagan Subbarayan

Drama Romance Thriller


ஒரு ஆர்டிஸ்டின் பதிலடி

ஒரு ஆர்டிஸ்டின் பதிலடி

5 mins 300 5 mins 300


மார்னிங் ஜாக்கிங்கிற்காக நான் கதவைத் திறந்து வெளியே வந்து, பூட்டி விட்டுத் திரும்பிய போது மின்னலடித்தது. எதிரே பளிச் அழகுடன் ஒரு பெண். இளங்காலையின் புத்துணர்வை முகத்தில் கொண்டிருந்தாள். மேக்கப் இல்லாத அழகான வதனம். ஊதா நிறச் சுடிதாரில் ரோஜாவாக ஜொலித்தாள். பிரம்மாவின் கைவண்ணத்தில் நான் என்னை மறக்க ஆரம்பிக்கும் போது கொஞ்சமே கொஞ்சமாய் அழகாய்ப் புன்னகைத்தாள்.


"நான் ஷியாமளா. எதிர் வீட்டிற்கு நேற்றுதான் குடி வந்தோம். இங்கு காலையில் பால் எத்தனை மணிக்கு வரும்?"

புன்னகை தொடர்ந்தது.


"ஓ...இங்கு காலையில் பால் லேட்டாகத்தான் வரும். நீங்கள் முதல் நாள் மாலையே பாக்கெட் பால் வாங்கிக் கொள்ள வேண்டும்"


"அப்படியா, நாங்கள் புதிதல்லவா. எங்களுக்குத் தெரியவில்லை" புன்னகையில் சிறிது ஏமாற்றம் தொற்றிக் கொண்டது. அந்த அழகான வதனத்தில் ஏமாற்றச் சாயலை என்னால் ஜீரணிக்க இயலவில்லை.


"இருங்கள். என்னிடம் ஒரு பாக்கெட் இருக்கிறது. இன்று நான் தருகிறேன்"


"இல்லை...உங்களுக்கு ஏன் வீண் சிரமம்...?" மறுப்பைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் மீண்டும் கதவு திறந்து, ஃபிரிட்ஜ் திறந்து, பாக்கெட்டை எடுத்துவந்து அவளிடம் நீட்டினேன்.


"நீங்கள் என்ன செய்வீர்கள். வேண்டாம்" என்று குயில் குரலில் தயங்கினாள்.


"பரவாயில்லை வைத்துக் கொள்ளுங்கள். நான் வேறு வாங்கிக் கொள்கிறேன்"


"அப்படியானால் ஒன்று செய்யுங்கள். நீங்களும் இப்பொழுது எங்களுடன் காஃபி சாப்பிட வருவதானால் நான் வாங்கிக் கொள்கிறேன்" என்று அவள் அழகுக் குரலில் மொழியும் போது புன்னகை கொஞ்சம் விசாலமானது. ரோஜா நிற ஈறுகளில் அழகான பல் வரிசை ஆரோக்கியத்தை உணர்த்தியது.


வீட்டின் உள்ளே சென்றேன். வந்து ஒருநாள் கூட ஆகவில்லை. அதற்குள்ளாகவே வீட்டை நேர்த்தியாக அழகாக்கியிருந்தார்கள். என்னை ஸோஃபாவில் அமரச் சொல்லி விட்டுக் கிச்சனுக்குள் நுழைந்தாள்.


"ஐந்து நிமிடத்தில் வந்து விடுகிறேன்"


வந்தாள். கூடவே ஒரு நடுத்தர வயதுப் பெண்ணும்.


"வணக்கம் தம்பி" காஃபி எடுத்துக் கொள்ளுங்கள்,

நான் ஷியாமளாவின் அம்மா. நீங்க எதிர் வீட்ல இருக்கறதா சொன்னா சியாமளா. வீட்ல இருக்கிறவங்களுக்கும் காஃபி கொடுத்திடலாம் தம்பி. இங்க நானும் ஷியாமாவும் மட்டும்தான்"


"அம்மா எப்பவுமே இப்படித்தான். நிறையக் கேள்வி கேட்பார்கள்" ஷியாமளாவின் புன்னகையில் நான் மயக்கமடையாமல் தடுக்க கையில் இருந்த காஃபி உதவியது.


"நான் மட்டும் தான் ஆன்ட்டி. என்னுடைய வேலைக்காக இங்கு தங்கியிருக்கிறேன். அம்மா, அப்பா, சிஸ்டர் எல்லாம் சொந்த ஊரில் இருக்கிறார்கள்"


"தம்பி, உங்க பேர் சொல்லவேயில்லையே!"


"நவீன், ஆன்ட்டி"


"என்னது நவீன் ஆன்ட்டிங்கிறது தான் உங்கள் பெயரா?" குறும்புடன் சிரித்தாள்.


அழகான பெண் சொன்னால் மொக்கை ஜோக்காய் இருந்தாலும் கட்டாயம் சிரிக்க வேண்டும் என்ற நியதி உள்ள படியால் சிரித்தேன். சிரிக்கும் போது அவள் கண்கள் வேறு என்னைப் பாடாய்ப் படுத்தியது. 


"நீங்கள் எங்கு வேலை பார்க்கிறீர்கள்?" புன்னகை மாறாமல், அழகான உதடுகள் காஃபியை உள் வாங்கின. 


"இன்ஃபோசிஸ்ல. நீங்க?"


"நான் ஒரு ஆர்ட்டிஸ்ட். ட்ராயிங்"


ஓ...படம் வரையும் கிளியா?

"எனக்கு ட்ராயிங் பற்றி எதுவுமே தெரியாதே" அசடு வழிந்தேன்.


"இரசிக்கத் தெரிந்தால் போதும். உள்ளே மகிழ்ச்சி பொங்கும். உங்கள் வேலையை நான் செய்ய முடியாதல்லவா? ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை. அவ்வளவுதான்" அவள் கண்களில் என்னுடன் நீண்ட நேரம் பேச வேண்டும் என்ற ஏக்கம் இருந்தது போல் தோன்றியது. அல்லது என் கற்பனையோ? என்னுடைய இதயத்தை அவளிடமே விட்டு விட்டேன் என நினைக்கிறேன். அவர்கள் இருவரிடமும் விடை பெற்று வெளியே வந்தேன். என் பின்னாலேயே வாசல் வரை வந்தவள், 


"மிஸ்டர்.நவீன், நான் உங்களை ஒன்று கேட்டால் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டீர்களே", திடீரென இமைகள் படபடக்கச் சொன்னாள். 


"சொல்லுங்கள். நான் எதையும் தவறாக நினைக்க மாட்டேன். ஆனால், இந்த மிஸ்டர் எல்லாம் வேணாம். வெறும் நவீன் போதும்",என்ன சொல்லப் போகிறாள் என ஆவலுடன் எதிர் பார்க்கத் துவங்கியது என் மனம்.


"அப்ப உங்க பேர் வெறும் நவீன்போதுமா?" மறுபடியும் அதே மொக்கை ஜோக். சொல்லிவிட்டு பளீரெனச் சிரித்தாள். நான் ஜோக்கை விட்டுவிட்டு அவள் சிரிப்பை ரசித்தேன்.


"சொல்லுங்கள்" என்றேன்.


"எனக்கே இது விசித்திரமாகத்தான் தோன்றுகிறது. எப்படிச் சொல்வது என்றும் புரியவில்லை" அவள் தயங்குவது கூட வெட்கப்படுவது போல் தோன்றியது. எனது கற்பனை எங்கெங்கோ போனது.


"படாரென்று போட்டு விஷயத்தை உடைத்து விடுங்கள்"


உடைத்தாள்.


"நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா"


இந்தக் கேள்வியில் என் மனம் உடனே ஒரு உச்சபட்ச சந்தோஷத்திற்கு ஆட்பட்டாலும் அந்தக் கேள்வியை என்னால் ஜீரணிக்க இயலவில்லை.


"என்ன திடீரென்று கேட்கிறீர்கள். இப்பொழுது தானே நாம் சந்தித்தோம். எனக்கு ஏற்கெனவே திருமணம் ஆகியிருக்கிறதா இல்லையா என்பது கூட உங்களுக்குத் தெரியாது"


"எனக்குத் தெரியும். நீங்கள் உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லும்போது உங்கள் அம்மா, அப்பா, சிஸ்டர் பற்றித்தான் சொன்னீர்கள். திருமணமானவராக இருந்தால் முதலில் மனைவி, குழந்தைகளைப் பற்றித்தான் சொல்லியிருப்பீர்கள்"


"சரிதான். ஆனால், என்னைப் பற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியாதே!"


"தெரியும். எல்லாம் தெரியும். உங்கள் சொந்த ஊர் சிவகாசி. உங்க சிஸ்டர் செயின்ட் ஜான்ஸ் இன்ஜினியரிங் காலேஜ்ல ஐ.டி. ஃபைனல் இயர். காலேஜ் டாப்பர். உங்க அம்மா பேரு சௌந்தர்யா. ஹவுஸ் வொய்ஃப். சன் டிவில மருமகள் சீரியல் தான் அவர்களுக்குப் பிடிச்சது. உங்க அப்பா சிவராமன், செகரெட்ரியேட்ல வொர்க் பண்ணிட்டு போன வருடம்தான் ரிடையர் ஆனார். இன்ஃபோசிஸ்ல உங்க ஸேலரி மன்த்லி ஒன்னரை லட்சம். சிகரெட், டிரிங்க்ஸ் பழக்கம் இல்லை. ரெண்டுமாதமா கவிதாங்கிற பெண் மேல உங்களுக்கு லேசா ஒரு இது  இருந்தது. ஆனால், அந்தக் கவிதா ஹரீஷ்னு ஒரு பாய்ஃபிரண்ட் பிடிச்சுட்டா. போதுமா?"


எனக்குத் தலை சுற்றியது. எப்படி என்னைப் பற்றி அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்கிறாள். ஒரு மகிழ்ச்சி உள்ளே ஊடுருவினாலும், அடுத்தவனைப் பற்றி இவ்வளவு ஆராய்கிறாளே என்று சிறிது எரிச்சலாகவும் இருந்தது.


"ஒரு நபரைப் பற்றி இவ்வளவு விசாரிப்பது அநாகரிகமில்லையா?"


"தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் நபரைப் பற்றி ஒரு பெண் அறிந்திருப்பது அவசியமில்லையா?"


அவள் சொல்வதிலும் ஒரு நியாயம் இருந்தது. 


"எப்பொழுது எங்கே முதலில் என்னைப் பார்த்தீர்கள்?"


"முதன் முதலில் என் கனவில் தான் உங்களைப் பார்த்தேன். நான் ஒரு ஆர்டிஸ்ட் என்பதாலோ என்னவோ இந்தக் கனவு எனக்கு அடிக்கடி வந்தது. ஒரு ராஜகுமாரன் குதிரை மேல் அமர்ந்திருக்கிறான். அவன் அருகில் நான் அமர்ந்திருக்கிறேன். இதுதான் அந்தக் கனவு. அந்த முகம் அப்படியே என் மனதில் பதிந்து விட்டது. ஒருநாள் சோளிங்கநல்லூர் சிக்னலில் காரில் செல்லும் போது உங்கள் முகத்தைப் பார்த்து விட்டேன். அப்பொழுது கார் நம்பரை நோட் பண்ணி, உங்கள் அட்ரஸ் கண்டு பிடித்து, உங்களைப் பற்றி விசாரித்து...இதோ உங்கள் வீட்டருகே குடி வந்துவிட்டோம். இப்போது பால் இல்லையென்று சொன்னது கூட பொய்தான். உங்களிடம் உடனே பழக வேண்டும் என்பதற்காக அப்படிச் சொன்னேன்"


எனக்குத் தலை சுற்றியது. எனக்குத் தெரியாமல் என்னைச் சுற்றி இவ்வளவு பிளானா? இருந்தாலும் ஒரு தேவதை என் மீதுள்ள காதலால் தான் இவ்வாறு செய்திருக்கிறாள் என நினைக்கும் போது, ஒரு இன்ஸ்டன்ட் காதல் அவள் மேல் வந்தது. 


"முதலில் ஒரு ஆறு மாதம் காதலித்து வி்ட்டுப் பிறகு திருமணம் செய்து கொள்ளலாம்" புன்னகைத்தேன்.


ஐந்து மாதங்கள் நாங்கள் உலக மகா காதலித்தோம். சிட்டியில் சுற்றாத இடமில்லை. பார்க்காத படமில்லை. வாழ்க்கை மிகச் சந்தோஷமாக ஓடிக் கொண்டிருந்தது. ஷியாமா, டெல்லிக்கு ஒரு எக்ஸ்பிஷனுக்குச் சென்று விட்டதால் கடந்த ஒரு வார காலமாக அவளை நான் பார்க்க முடியலில்லை. கான்டாக்ட் பண்ணவும் முடியவில்லை.


இப்படியிருக்கையில் ஒருநாள் திடீரென ஷியாமளா என்னை மொபைலில் அழைத்தாள்.


"நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும். உடனே, உன் ஆஃபீஸ் எதிரே இருந்த ரெஸ்டாரண்ட் வர முடியுமா?" 


"வாவ், வாட் எ ப்ளஸன்ட் சர்ப்ரைஸ். டெல்லியிலிருந்து வந்துவிட்டாயா? இதோ உடனே வருகிறேன்"

அவள் குரலில் உற்சாகமின்றி ஒரு பதட்டம் தெரிந்ததே. ஏன்?


அந்த ஜன்னலோர சீட்டில் அமர்ந்திருந்தாள். முகம் சற்று வாட்டமாயிருந்தது. 


"ஏய், என்ன சோகமாக இருப்பது போல் தெரிகிறது? காஃபி ஆர்டர் பண்ணட்டுமா?"


தலையாட்டினாள்.


காஃபி வந்ததும் ஒரு வாய் ஸிப்பினாள். ஐயோ அந்த உதடுகள். சே! சோகமாக இருக்கிறாள். என்ன என்று கேட்போம்.


"சொல், ஷ்யாம்", காதல் நெருக்கத்தால், ஷியாமளா எனக்கு ஷ்யாம் ஆகியிருந்தாள்.


"நான் ஒரு விஷயம் சொன்னால் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டாயே"


"நான், என்றைக்காவது நீ சொல்வதைத் தவறாக எடுத்துக் கொண்டிருக்கிறேனா? சொல்!"


"ஒரு வாரமாக மீண்டும் மீண்டும் எனக்கு அந்தக் கனவு வந்தது"


"சரி, கனவில் நான் வந்தேன் ராஜ குமாரனாக. அதுதானே!"


"நீ ராஜ குமாரன் தான். ஆனால், கனவு வேறு மாதிரி வந்தது. நீ என்னை வலுக்கட்டாயமாகக் கடத்திக் கொண்டு போகிறாய்!"


"ஓ மை காட்! நீ என்ன சொல்கிறாய்?"


"நீ என் காதலனைக் கொன்று விட்டு என்னைக் கடத்திக் கொண்டு போகிறாய். என் காதலனின் முகம் நன்றாகத் தெரிந்தது. கனவின் முதல் பாதியில் வந்ததை நம்பி உன்னைக் காதலிக்கத் தொடங்கி விட்டேன். ஆனால், என் கனவை மீறி இனிமேல் உன்னைக் காதலிக்க முடியுமென்று தோன்றவில்லை!"


இடிந்துபோய் ஷியாமளாவை வெறிக்கப் பார்த்தேன். சும்மா கெடந்த சங்கை ஊதிக் கெடுத்தது போல், மனதில் காதல் ஆசையை வளர்த்து விட்டு, திடீரென இப்படிச் சொன்னால்? என்னால் தாங்க முடியவில்லை. இதயம் முழுதும் சோகம் அப்பிக் கொண்டது. அழுது விடலாம் போல் தோன்றியது. சோகம் நெஞ்சை அடைத்தது. வாழ்க்கையே சூன்யமானது போல் தோன்றியது. அவள் மேல், என்மேல், எல்லோர் மேலும் எரிச்சல் வந்தது. ஏன் எனக்கு மட்டும் இப்படி? 


"என்னால் உன்னை மறக்க முடியாது ஷ்யாம். நான் எப்படித் தாங்குவேன்?"


"உன்னால் முடியும் நவீன். மஞ்சுவால் முடியும் போது உன்னால் முடியாதா என்ன?" அவள் குரலில் திடீரென ஒரு ஏளனமும், உறுதியும், கம்பீரமும் தெரிந்தது.


நான் திடுக்கிட்டு நிமிர்ந்தேன். 


"என்ன வியப்பாய் இருக்கிறதா? உன்னைப்பற்றிச் சொல்லும் போது நான் மஞ்சுவைப் பற்றிச் சொல்லாதது உனக்கு நிம்மதியாக இருந்ததல்லவா? இப்போது தெரிந்து கொள். மஞ்சு என் தங்கை. அவள் சொல்லித்தான் உன்னைப்பற்றித் தெரியும். அவளுக்கு ஒரு அக்கா இருப்பது உனக்குத் தெரியாது. அவளை ஒரு வருடமாகக் காதலித்து விட்டுக் காரணமேயில்லாமல் அவளைப் புறக்கணித்தாயே! நினைவிருக்கிறதா? அவள் ஆறு மாதமாக டிப்ரஷனில் இருந்து, ட்ரீட்மெண்ட் எடுத்து, குணமாகி இப்போது திருமணமாகி, சியாட்டிலில் செட்டிலாகி விட்டாள். அவள் அனுபவம் நீ பெற வேண்டாமா? அதற்குத்தான் இந்த விளையாட்டு. உனக்கு டிப்ரஷன் வந்தால், மஞ்சு கன்ஸல்ட் செய்த டாக்டர். பார்த்தசாரதியிடம் செல். நல்ல கைராசிக்கார டாக்டர். பை தி வே, நாங்கள் முந்தாநாளே மும்பையில் செட்டிலாகி விட்டோம்!"

சொல்லிவிட்டு, விருட்டென்று எழுந்து திரும்பிப் பார்க்காமல் சென்று விட்டாள்.


நான் நாளைக்கு டாக்டர். பார்த்த சாரதியிடம் அப்பாய்ன்மெண்ட் வாங்க வேண்டும்.
Rate this content
Log in

More tamil story from Arivazhagan Subbarayan

Similar tamil story from Drama