Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Dr.PadminiPhD Kumar

Classics

4  

Dr.PadminiPhD Kumar

Classics

ஞாயிறுதோறும் சிறுகதை - கதை 7

ஞாயிறுதோறும் சிறுகதை - கதை 7

3 mins
257



கிராமத்து கிளி 

ஆண்டிப்பட்டி என்றொரு கிராமம். அங்கே வயிற்றுப் பிழைப்புக்காக வீட்டு வேலை செய்து தன் பிள்ளைகளை வளர்க்கும் ஒரு தாய். அவளது மகன் மோகன். படிப்பு வரவில்லை. நண்பர்களுடன் சேர்ந்து தோட்டங்களில் சுற்றி மரங்களில் தொங்கும் கனிகளைப் பறித்து பசியாறி தன் வாழ்நாளை ஓட்டிக் கொண்டிருந்தான். ஒருநாள் அவர்கள் வீட்டிற்கு அவளது தாயின் சிறுவயது தோழி பார்வதி வந்து இருந்தாள். அவனைப் பார்த்தாள். அவனைப்பற்றி அவரது தாயிடம் விசாரிக்கும் போது தான் தெரியும் அவன் படிப்பு இல்லாமல் வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறான் என்று.


`பொறுப்பில்லாமல் இப்படி மகனை வளர்கிறாயே!’ என்று தோழி கூறினாள்.

“நான் என்ன செய்வது, அவங்க அப்பா இருந்த வரையில் பொறுப்பாக தான் இருந்தான்.அவர் திடீரென இறந்த பின் இவன் இப்படி பொறுப்பில்லாமல் சுற்றுகிறான். என் பேச்சைக் கேட்பதே இல்லை.”


` சரி, நான் ஒன்று சொல்கிறேன். கேட்கிறாயா?’ என்று தோழி கூற

` என்ன?’ என்று தாய் கேட்டாள்.

` நான் சென்னைக்கு போகிறேன். அங்கே தான் எனக்கு வேலை என்று உனக்கு தெரியுமே. உன் பையனுக்கும் அங்கே வேலை வாங்கி தருகிறேன். அவனை என்னுடன் அனுப்பு .’என்று கேட்டாள்.


` அவனுக்கு சென்னை என்றால் பிடிக்கும். ஆனால் வேலை என்று சொன்னால் வர மாட்டானே…' என்றதும்

` வேலைக்கு போவதாக சொல்ல வேண்டாம். நான் அவனை ஊர் சுற்றிப்பார்க்க கூட்டிப் போகிறேன் என்று சொல்கின்றேன். நீயும் அப்படியே சொல்.’ என்றதும்

‘ சரி.’என்று தாயும் மோகனிடம்,`சென்னை பார்க்க என் தோழி போகின்றாள். அவளுடன் நீயும் போகிறாயா?’என்று கேட்டாள்.


 மோகனுக்கு சென்னை நகரம் என்றால் மிகவும் பிடிக்கும்.அவனுக்கு சூர்யா, விஜய், அஜித் போன்ற நடிகர்களை அங்கு சென்றால் பார்க்கலாம் என்ற எண்ணம்.

 எனவே அம்மாவிடம் ,”அவர்கள் எப்படி என்னை கூட்டிப் போவார்கள் என்று கேட்டான்?”

 “அவளுக்கு என்னை ரொம்ப பிடிக்கும்.என்னை கூப்பிட்டாள். நான் இப்போது வரமுடியாது என்று கூறினேன்.அதனால் உன் பையனையாவது என்கூட அனுப்பேன் என்று கேட்டாள். நான் என்ன சொல்லட்டும்…..?”என்று மோகனிடம் கேட்கவும், “நிஜமாகவே அவர்கள் ஊரை சுற்றிக் காட்டுவார்களா?”என்று கேட்டான்.


“ஆமாம்.அதற்காகத்தான் அவள் உன்னை கூப்பிடுகின்றாள்.”என்று சொன்னதும் மோகனுக்கு ஒரே சந்தோஷம்.”சரி,தம்பி, பாப்பாவை பத்திரமா பார்த்துக்கொள்.நான் போய் சென்னையை சுற்றி பார்த்து விட்டு வருகிறேன்.”என்று சொல்லி விட்டு மிகவும் பொறுப்புள்ள பையனைப் போல் ஒரு துணிப்பையில் தன்னிடம் இருக்கும் துணிமணிகளை எடுத்துக் கொண்டு புறப்படத் தயாரானான்.


தோழியும் தாயிடம், “இப்போதைக்கு 100 ரூபாய் தருகின்றேன் வாங்கிக்கொள். பின்னர் மாதாமாதம் பணம் அனுப்புகிறேன்.”என்று சொல்லிவிட்டு புறப்பட்டு போனார்கள்.

 இரவு நேரப் பயணம். விடியும் நேரத்தில் சென்னை வந்து சேர்ந்தார்கள். மோகனை ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று காலிங் பெல்லை அழுத்தினாள் பார்வதி. வீட்டிற்குள் இருந்து ஒரு பெண்ணின் குரல், “ யாரது?”

“நான்…..தாம்மா…. பார்வதி.வேலைக்கு ஆள் கேட்டிருந்தீர்கள்.” என்று சொன்னாள். “இரு, வருகிறேன்.”என்று சொல்லி அந்தப் பெண்மணி கதவைத் திறந்தார்.


 வாசலில் கிராமத்து பையனான மோகனை பார்த்ததும்,”யார் வேலைக்கு வந்து இருப்பது? “ என்று கேட்டார்.”இந்தப் பையன் தான்; வீட்டோடு வைத்துக் கொள்ளுங்கள்.”என்று சொன்னதும் மோகன் திடுக்கிட்டான்.


“இவ்வளவு சிறிய பையனாக இருக்கிறானே? வேலை தெரியுமா? கிராமத்து பையனாக வேறு இருக்கின்றானே?”என்று கேட்டாள்.

“இல்லை அம்மா, சொல்லிக்கொடுத்தால் கற்றுக் கொள்வான். நீங்கள் இரண்டு மூன்று நாட்கள் சொல்லிக் கொடுங்கள்.பழகிக் கொள்வான்.” என்று சொல்லி அவனை அங்கே விட்டு விட்டு போய்விட்டாள். மோகனுக்கு இப்போதுதான் புரிந்தது; அவன் திக் பிரமை பிடித்தவன் போல் நின்று கொண்டிருந்தான்.

வீட்டுப் பெண்மணி,”இங்கே வா, உன் பெயர் என்ன?”என்று கேட்டதும்,”மோகன்” என்று சொன்னான்.


“ சரி, சரி, உன் பையை அந்த பால்கனியில் கொண்டு போய் வை. இனி நீ இங்கே தான் படுத்துக்கொள்ள வேண்டும். இந்த இடம் தான் உனக்கு. முதலில் போய் முகத்தை நன்றாக கழுவி, கைகால்களை கழுவிக்கொண்டு வா. டீ தருகிறேன்.”


முதலாளி அம்மா ரொம்ப நல்ல மாதிரி அவனுக்கு ஒவ்வொரு வேலையாக கற்றுக்கொடுத்தார். சப்பாத்தி போட்டான்; டீ போட கற்றுக்கொண்டான்; வீட்டை பெருக்கி துடைக்க கற்றுக்கொண்டான்; ஆனால் இரவில் தூங்கும் போது அவனுக்கு கிராமத்து நினைவு வரும். சில நேரங்களில் எழுந்து உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிடுவான். முதலாளி அம்மாவின் மகனும் மகளும் அவனைப் பார்த்து, “இவன் ஏன் இப்படி அழுகின்றான்” என்று அவர்கள் அம்மாவிடம் சொல்லி,”அவனை அனுப்பி விடுங்கள்… அவன் உங்களுக்கு உதவ மாட்டான்.”என்று சொல்வார்கள். 


முதலாளி அம்மா அவனைப் பக்கத்தில் உட்கார வைத்து நிலைமையை விளக்கிச் சொல்லுவார்.”நீ வேலை கற்றுக்கொள் ஒன்று, இரண்டு மாதங்கள் இங்கே இரு. உனக்குப் பிடிக்காவிட்டால் பரவாயில்லை.எங்கள் வீட்டுப் பிள்ளைகள் மாதிரி உன்னை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம்.சில நாட்களில் உன்னை நான் கிராமத்திற்கு அனுப்பி விடுவேன். கவலைப்படாதே.”என்று கூறி அவனை ஆறுதல் படுத்தினார்கள்.அவனும் சரி என்று கேட்டுக்கொண்டு வேலையை கற்றுக் கொண்டான். 


ஒரு மாதம் ஓடியது.வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும்போது ஒரு போன் கால் வந்தது.முதலாளி அம்மா போனில் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்,”சரி,சரி, எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றது…..போகப்போக சரியாகிவிடும்.இன்னும் ஒரு மாதம் போகட்டும்.நான் பணம் கொடுக்கிறேன்” என்று சொல்வதைக் கேட்டான்.அவனுக்கு ஏதோ புரிந்தும் புரியாதது போல் தோன்றியது. 


மறுநாள் அவன் சமையல் அறையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு எப்பொழுதுமே டீயை ஒரு கைப்பிடி உடைந்த டீகப்பில் தான் கொடுப்பார்கள்.மெதுவாக சாப்பாட்டு அறைக்கு வந்து நின்றான். எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.”உனக்கு என்ன வேண்டும்?”என்று கேலியாகக் கேட்டார் முதலாளி ஐயா.


”நீங்கள் எல்லோரும் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து சாப்பிடுகிறீர்கள்.என்னையும் உங்கள் வீட்டில் ஒருவனாக நினைக்கின்றோம் என்று சொல்கிறீர்கள்.ஆனால் என்னை சாப்பாட்டு மேஜையில் உட்கார்ந்து சாப்பிட அனுமதிப்பது இல்லையே. அதுமட்டுமல்ல…..எனக்கு எப்பவும் டீ கைப்பிடி உடைந்த அந்த டீ கப்பில் தான் கொடுக்கிறீர்கள். இது நியாயமா?” என்று கேட்டான்.


”நான் என் கிராமத்திற்கு போகின்றேன்”என்று அவன் பழைய பல்லவியை ஆரம்பித்தான். முதலாளி அம்மாவும் அய்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். “சரி, சரி, இனிமேல் நீயும் இங்கேயே உட்கார்ந்து சாப்பிடு.” என்று சொல்லும்போதே முதலாளியின் மகனும் மகளும் உடனே சாப்பாட்டு மேஜையில் இருந்து எழுந்து கை கழுவி போய்விட்டார்கள்.அவர்களுக்கு இவனை இவ்வாறு இவ்விதம் நடத்துவது பிடிக்கவில்லை என்று மோகனுக்கு புரிந்தது.


                 அன்று இரவு எல்லோரும் படுக்க சென்றனர். மோகனும் படுத்து தூங்கினான். காலையில் முதலாளி அம்மா,” டீ போட்டு விட்டாயா?”என்று கேட்டுக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்தார்.மோகனை அங்கே காணவில்லை. பால்கனி பக்கம் போய் பார்த்தார்கள்.அங்கே அவன் பையும் இல்லை. பால்கனி வழியாக வெளியே குனிந்து காலனியின் கேட்டை தாண்டி யாராவது போய்க் கொண்டிருக்கிறார்களா என்று பார்த்தார்கள்.


             வெகுதொலைவில் மோகன் ஜன சமுத்திரத்தில் நடந்து போய்க் கொண்டிருந்தான்.அவன் தோளில் துணிப்பை. கிராமத்துக் கிளிக்கு இறக்கை முளைத்து அது சுதந்திரமாக பறந்துகொண்டிருந்தது.



Rate this content
Log in

Similar tamil story from Classics