Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Dr.PadminiPhD Kumar

Classics

4  

Dr.PadminiPhD Kumar

Classics

ஞாயிறுதோறும் சிறுகதை - கதை 18 இதுவும் கடந்து

ஞாயிறுதோறும் சிறுகதை - கதை 18 இதுவும் கடந்து

2 mins
359



        கதையின் நாயகன் தனசேகரன் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். பெயரிலாவது தனம் சேரட்டுமே என பெற்றோர் எண்ணினார்களோ என்னவோ பெயரில் மட்டுமே தனம் இருந்தது. வீடு குசேலரின் வீடு போல இருந்தது. துவாபரயுகத்தில் பிறந்த கிருஷ்ணரின் நண்பர் குசேலன்-சுசீலை தம்பதிகளுக்கு 27 குழந்தைகள் பிறந்ததாகச் சொல்வர். இங்கே கலியுக நாயகன் தனசேகரனுக்கு மூன்று குழந்தைகள் தான். ஆனாலும் குலசே கரனின் நிதிநிலைமை குசேலரையும் மிஞ்சி நின்றது.


        கொரோனா வந்தாலும் வந்தது; வேலை பறிபோயிற்று. மாதச் சம்பளம் மாதச் செலவுக்கு பற்றியும் பற்றாமலும் இருந்த காலகட்டத்தில் இருக்கும் வேலையும் பறி போனதால் இனி எப்போது தொழிற்சாலையில் வேலை தொடங்கும்? தனக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும்? என ஏங்க ஆரம்பித்தான் தனசேகரன். மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் ஏப்ரல் மாதம் சம்பளம் இல்லை என்பது புரிந்த மனைவி தாரிணி தன் கம்மலைக் கழற்றிக் கொடுத்தாள்; மே மாதம் வளையல்களைக் கொடுத்தாள்; ஜூன் மாதம் தாலிக்கொடியைக் கொடுத்தாள்; தாலியும் மூக்குத்தியும் பாரம்பரிய அடையாளமானதால் கழட்டப்படாமல் இருந்தன.


             இனியாவது தொழிற்சாலை திறக்கப்படுமா என்று தனசேகரன் கவலைப்பட ஆரம்பித்தான். வெயிலின் கொடுமையால் மூன்றாவது குழந்தைக்கு அம்மை நோய் தாக்கியது. தாரிணி குழந்தையை டாக்டரிடம் காண்பித்தாள். முதல் நாள் நோயின் தாக்கம் உடல் வெப்பத்தில் தெரிந்தது; உடல் தீயாக கொதித்தது. குழந்தை வெப்பம் தாங்காமல் கண்கள் மூடிய நிலையில் படுக்கையில் அரற்றிக்கொண்டிருந்தான். ஒன்றரை வயது குழந்தை ஒரே நாளில் துவண்டு போனான்.


            மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்து சீட்டை கையில் எடுத்துக்கொண்டு தனசேகரன் அயர்ன் செய்யப்படாத பேன்ட் சட்டை அணிந்துகொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தான். கையில் ஒத்தப் பைசா கிடையாது; கொரோனா யுகத்தில் கடன் கொடுப்போரும் யாரும் இல்லை. வேலை இல்லாதவன் என்பதாலேயே வீதியில் பார்க்கும் நண்பர்களும் உறவினர்களும் எங்கே கடன் கேட்டு விடுவானோ என்று அவனை கண்டும் காணாததுபோல் விலகிச் செல்வதை அவன் உணர்ந்தான்.அவன் வேண்டுமானால் குசேலராக இருக்கலாம்; ஆனால் கிருஷ்ணராக நண்பர்கள் தயாராக இல்லை.


      மருந்து சீட்டை சட்டைப் பையில் திணித்து விட்டு கால் போன போக்கில் நடக்கலானான். ஊருக்கு வெளியே இருக்கும் பார்க் வந்ததும் பார்க்கில் நுழைந்து ஒரு பெஞ்சில் உட்கார்ந்தான். மருந்து சீட்டை கையில் எடுத்துப் பார்த்தான். எழுத்துக்களை கண்ணீர் மறைத்தன. குழந்தை முகம் தான் தோன்றியது. தலையை தூக்கிப் பார்த்தபோது பார்க்கின் முன்னே 'ஒரு குடும்பம் ஒரு வாரிசு' என்று கொட்டை எழுத்தில் எழுதப்பட்ட அரசாங்க பேனர் கண்ணில் பட்டது. அவன் மனம் திடீரென கணக்கு போட ஆரம்பித்தது.


          ஒவ்வொரு குழந்தைக்கும் மாதம்தோறும் குறைந்த அளவு ஆனாலும் ஏழு கிலோ அரிசி, அரை கிலோ பருப்பு, காய்கறிகள், ஸ்கூல் பீஸ், அது, இது, என….. மூன்று குழந்தைகளில் ஒன்று குறைந்தால்……. மனதில் தோன்றிய அதிபயங்கர சிந்தனையில் தனசேகரன் அழ ஆரம்பித்தான்.


         வறுமை, தனிமை இரண்டும் அவன் மனதில் இத்தகைய கொடூர சிந்தனைக்கு வழி வகுக்கின்றன என்பதை புரிந்ததும் உடனே எழுந்தான். விறுவிறுவென வீட்டை நோக்கி நடந்தான். வேகமாக உள்ளே சென்று கட்டிலைப் பார்த்தான். குழந்தை ஜூரம் தணிந்து நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தான். அவனைத் தூக்கி தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.


         தாரிணி தானே முன்வந்து,”அம்மை விளையாட்டு காட்டத்தான் செய்யும். பக்கத்து வீட்டு பாட்டி வந்து மருந்து கொடுக்க வேண்டாம். சரியாகி விடும் என்றார்கள்.மருந்து வாங்கப் போக வேண்டாம்.” என்றாள். அதே நேரத்தில் அரசாங்கம் கொடுத்த விலையில்லா டிவியில் நாளை முதல் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தொழிற்சாலைகள் 50% ஊழியர்களுடன் திறக்க அரசாங்கம் அனுமதி அளிப்பதாக செய்தி வந்தது. தனசேகருக்கு அப்போதுதான் புரிந்தது,”இதுவும் கடந்து போகும்” என்பது.


Rate this content
Log in

Similar tamil story from Classics